வாகன நெரிசலை குறைக்க பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய வாகன காப்பகம்: மதுரை ரயில்வே நிர்வாகம் திட்டம்

மதுரை, டிச. 15: ரயில்வே குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வாகன காப்பகத்தை மதுரை ரயில்வே நிர்வாகம் கட்ட இருக்கிறது. மதுரை எல்லீஸ் நகர் ரயில்வே பாலத்திற்கும் பாண்டி பஜாருக்கும் இடையே பழைய ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர்கள் குடியிருந்து வந்தனர். தற்பொழுது இந்த ரயில்வே காலனி வீடுகள் பழையதாகி பழுதடைந்து விட்டது. அவை பயன்பாட்டிலும் இல்லை. இங்கிருந்தவர்கள் வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று வசித்து வருகின்றனர்.

இந்த இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வாகன காப்பகமாக மாற்ற மதுரை ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வாகன காப்பகத்திற்கு ஆர்.எம்.எஸ். ரோடு வழியாக செல்லலாம். மொத்தம் 1100 சதுர மீட்டர் பரப்புள்ள இந்த வாகன காப்பகத்திற்கான இடத்தை தெற்கு ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ‘இந்த பழைய குடியிருப்புகள் பயன்படாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் வாகன காப்பகம் ஏற்படுத்த முடிவு செய்தோம். இந்த முயற்சி மதுரை நகரில் வாகன நெரிசலை குறைக்க உதவும்’ என்றார்.

Related Stories: