தஞ்சை மாவட்டத்தில் 5,438 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன், நலத்திட்ட உதவிகள்

தஞ்சை, டிச.15: தஞ்சையில் 5,438 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன், நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடைய செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஆகிய 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இத்திட்டங்களின்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 58,463 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நேற்று ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதே சமயம் தஞ்சையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 5,438 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 67 ஆயிரத்து 455 உறுப்பினர்களுக்கு ரூ.175.74 கோடி மதிப்பிலான கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு கொறடா கோவி.செழியன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள்.துரை.சந்திரசேகரன், அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, ஜிவாகிருல்லா உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: