×

திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் வெளிநாட்டு பறவைகள்

திருப்பூர், டிச.15:   திருப்பூர் நஞ்சராயன்குளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வரத்துவங்கியுள்ளன.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு, சர்க்கார்பெரியபாளையம் அருகே 440 ஏக்கர் பரப்பில், நஞ்சராயன் குளம் உள்ளது. இங்கு, பறவைகள் வசிப்பதற்கு ஏற்ற சூழல், உணவு, நீர் இருப்பு உள்ளிட்டவை காணப்படுகின்றன. ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் இருந்தும், இமயமலையில் இருந்தும், ஆண்டுதோறும், குளிர்காலத்தில், அக்டோபர் முதல் மார்ச் வரை ஏராளமான பறவையினங்கள், இக்குளத்துக்கு வருகின்றன. அதன்படி 150 வகை அரிய பறவைகள், வந்து செல்வது, ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது மங்கோலியா, ரஷ்யாவிலிருந்து, பட்டை தலை வாத்துகள் அதிகளவில் வந்துள்ளன. ஐரோப்பா மற்றும் சைபீரியாவில் இருந்து தட்டைவாயன், நீலச்சிறகி, கிளுவை, ஊசிவால் வாத்து போன்ற பறவைகள் வந்துள்ளன.

இதுகுறித்து இயற்கை கழக நிறுவனர் ரவீந்திரன் கூறியதாவது: நடப்பாண்டு மழை அதிகளவில் இருந்தது. கால நிலை மாற்றம் காரணமாகவும், வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது. தற்போது மழை நின்று விட்டதால் பறவைகள் வர துவங்கியுள்ளன.வெளிநாட்டு பறவைகள் தவிர, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகம், கொக்குகள் அதிகளவில் உள்ளன. பல்வேறு பறவைகள் தற்போது முதன் முறையாக இங்கு வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tiruppur Nanjarayan Pond ,
× RELATED நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம்