×

கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஈரோடு, டிச. 15: ஈரோடு  கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வழிபாட்டிற்கு  அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது  வழக்கமாகும். இந்தாண்டு விழா கடந்த 4ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

பகல் பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை மூலவர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு  நிகழ்ச்சி நேற்று அதிகாலை திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சியுடன்  தொடங்கியது. பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு  அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டதையடுத்து காலை 6 மணி முதல் பக்தர்கள்  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு  கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்ற பக்தர்கள் பரமபத வாசலில் நுழைந்து கோயிலை  சுற்றி வந்து கோபுர தரிசனம் செய்த பின் மூலவரை வழிபட்டு வெளியே வரும்  வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக கோயிலில்  அமர அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மாஸ்க் இல்லாமல் வந்த பக்தர்களுக்கு  அனுமதி வழங்கப்படவில்லை.

பக்தர்கள் கூட்டம் மற்றும் பாதுகாப்பு பணிகளில்  போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சொர்க்கவாசல்  திறப்பு நிறைவடைந்ததையடுத்து வருகிற 23ம் தேதி வரை ராப்பத்து உற்சவம்  நடைபெற உள்ளது.

Tags : Heaven Gate ,Kasturi Aranganathar Temple ,
× RELATED வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு...