பஞ்சமி, பூமிதான நிலங்களை மீட்கக்கோரி பெரியகுளத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பெரியகுளம், டிச. 4: ஆண்டிபட்டி தாலுகாவில் ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி மற்றும் பூமிதான நிலங்களை மீட்டு, வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு பட்டா வழங்கக் கோரி பெரியகுளம்  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்.) கட்சியினர் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். ஆண்டிபட்டி தாலுகாவில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல, 00 ஏக்கருக்கும் மேற்பட்ட பூமிதான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு செங்கல் சூளை வீடுகள், வீடுகள் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இவைகளை மீட்டு வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு பட்டா வழங்கக்கோரி, சிபிஐ (எம்.எல்.) கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றிய அமைப்புச்செயலாளர் கோபால் தலைமையில், மாவட்ட அமைப்புக்குழு நிர்வாகி அபுதாகிர், மாவட்ட அமைப்புச் செயலாளர் இளையராஜா ஆகியோர் பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களையும், பூமிதான நிலங்களையும் தமிழக அரசு மீட்டு வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இது தொடர்பாக  பஞ்சமி நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய மனுவை பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.   

Related Stories: