×

வரி விளம்பரம் பட்டுக்கோட்டை, மதுக்கூரில் நடந்த மக்களை தேடி முதல்வர் முகாமில் 3000 மனுக்கள்

பட்டுக்கோட்டை, டிச.14: பட்டுக்கோட்டையில் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீர்வு காண உள்ளார் என்று அறிவிக்கப்பட்டதால் அமைச்சரிடம் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக வழங்குவதற்கு காலையிலிருந்தே மண்டபத்திற்கு பொதுமக்கள் வரத்தொடங்கினர். சுமார் 750க்கும் பெண்கள் உள்பட 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மண்டபத்திற்குள் நுழையும்போது நுழைவு வாயிலிலிருந்தே பொதுமக்களிடம் அவர்களது இருக்கைக்கே தேடிச்சென்று மனுக்களை வாங்கினார். அதனை தொடர்ந்து நடந்த விழாவிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை பேசினார். அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக தரும்போது அதை நாங்கள் வெறும் காகிதங்களாக பார்க்கவில்லை. நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையாகவே பார்க்கின்றோம். நாங்கள் தேர்தல் நேரத்தில் எப்படி வேர்க்க விறுவிறுக்க ஓட்டு கேட்க வந்தோமோ அந்த நிலையிலிருந்து கொஞ்சம்கூட மாறாமல் இன்று வேர்க்க விறுவிறுக்க உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார்.

முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் பட்டுக்கோட்டை வடக்கு பார்த்திபன், மேற்கு ராமநாதன், கிழக்கு முருகானந்தம், தெற்கு சத்தியவிஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுக்கூர்: முன்னதாக மதுக்கூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாமில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சுமார் 1,000க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார். மதுக்கூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் இளங்கோ, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை, மதுக்கூரில் மொத்தம் 3,000 மனுக்களை பொதுமக்களிடமிருந்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பெற்றார்.

Tags : CM ,Pattukottai, Madukkur ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...