×

வேலூர் சத்துவாச்சாரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை அமைப்பதற்காக போர்வெல்கள் மூடுவதால் குடிநீர் தட்டுப்பாடு: குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஆர்டிஓ விஷ்ணுபிரியா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில், வேலூர் விருபாட்சிபுரம் குளவிமேடு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘எங்கள் கிராமத்தில் ஆண்டுதோறும் மாடு விடும் விழா நடத்தி வந்தோம், அரசு அனுமதி கிடைக்காததால் 5 ஆண்டுகளாக மாடு விடும் விழா நடத்தவில்லை.

2018ம் ஆண்டு மாடு விடும் விழா நடத்த அனுமதி கேட்டும் தரவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் திருவிழாவுடன் மாடு விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும்’ இவ்வாறு அதில் கூறியிருந்தனர். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த போர்வெல்களை அதிகாரிகள் அகற்றி அதனை முழுவதுமாக மூடிவிட்டு செல்கின்றனர்.

இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் போர்வெல் பழுது அடைந்துவிட்டதாக சொல்லுகிறார்கள். ஆனால் போர்வெல்கள் பழுது ஏற்படவில்லை. எனவே மூடப்பட்ட போர்வெல்களை திறந்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மாயமான மொபட்டை மீட்ட போலீசார்
வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க மொபட்டில் வந்தார். மொபட்டை கலெக்டர் அலுவலக போர்டிகோ வெளியே நிறுத்தி இருந்தார். மனு அளித்துவிட்டு வந்து பார்த்தபோது மொபட் திடீரென மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது மொபட் கலர் மற்றும் அதே நிறுவனம் பெயரில் வேறு ஒரு மொபட் அருகில் இருந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக சிசிடிவி கேமிரா பதிவுகளை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நிறுத்திவிட்டு சென்று இருந்த மொபட் வாகனத்தில் உள்ள பதிவெண்களை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவரின் பெயரில் மொபட் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த வீட்டிற்கு சென்று மொபட் உள்ளதா? என விசாரணை நடத்தும்படி தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் அலுவலக பணிக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது மொபட்டை தவறுதலாக மாற்றி எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாற்றி கொண்டு சென்ற அந்த மொபட்டை அரசு ஊழியர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து போலீசார் அந்த மொபட்டை மீட்டு சங்கீதாவிடம் வழங்கினர்.

Tags : Vellore Sattuvachari ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து...