திருமயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் கொள்ளை

திருமயம். டிச.14: திருமயம் அருகே வீட்டின் பூட்டு உடைத்து ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டியில் பெரிய கருப்பன் செட்டியார் படைப்பு வீடு உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர்களில் தங்கி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் உள்ளே இருந்து மர்ம நபர்கள் வெளியேறுவதை அக்கம்பக்கத்தினர் பார்த்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்கள் நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தியதில், வீட்டில் உள்ள 5 அறைகளில் பூட்டு உடைக்கப்பட்டு திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்களை போலீசார் சம்பவ இடத்திற்கு வர வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாளரை பவுன் தங்கம், ஒரு வைர மூக்குத்தி, 300 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடு போனதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து காசிமுருகன் கொடுத்த புகாரையடுத்து நமணசமுதிரம் போலீசார் வழக்கு பதிந்து பொருட்களை கொள்ளையடித்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: