×

விராலிமலையில் வரத்து அதிகரித்தும் வியாபாரிகள் வராததால் களையிழந்த ஆட்டுச்சந்தை

விராலிமலை, டிச. 14: கார்த்திகை மாதம், காணை என்ற உயிர்க்கொல்லி நோய் தாக்குதல் தொடர்வதால் விராலிமலையில் ஆட்டுச்சந்தை களையிழந்தது. ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையாகும் சந்தையில், சில நூறு ஆடுகள் மட்டுமே விற்பனை ஆனதால் வியாபாரிகள் விரக்தி அடைந்தனர். வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை விராலிமலையில் தொடங்கும் ஆட்டுச்சந்தை அப்பகுதியில் பிரபலமானதாகும். சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து பல ஆயிரம் ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும். இதை வாங்குவதற்கு திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே விராலிமலை வந்து தங்கியிருந்து அதிகாலையில் ஆடுகளை வாங்கி செல்வார்கள். விராலிமலை சந்தையில் வாங்கப்படும் ஆடுகளுக்கு வெளியூர்களில் கிராக்கி அதிகம். காரணம் இப்பகுதிகளில் ஆடுகள் வளர்க்கப்படும் முறையாகும்.

இயற்கை உணவை மட்டுமே ஆடுகள் தின்று வளர்வதால் இந்த ஆட்டுக் கறிக்கு ருசி அதிகம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஆட்டுச்சந்தை தொடங்கியது முதலே ஆடு வாங்கி வளர்ப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. காரணம் தற்போது மழைக்காலம் என்பதால் ஆடுகளுக்கு காணை என்ற வாய்ப்புண் நோய் தாக்குகிறது. இந்த நோய் தாக்கிய ஆடுகள் சில வாரங்களிலேயே இறந்து விடுகின்றன. இதனால் ஆடு வளர்ப்போர் தற்போது ஆடு வளர்ப்பதறகு உகந்த நேரம் இல்லை என்று கருதுகின்றனர். மேலும் கார்த்திகை மாதம் அய்யப்பன் சீசன் என்பதால் அசைவ உணவு உண்போர் எண்ணிக்கை இந்த மாதத்தில் குறைவாக இருக்கும்.

இந்த நிலையில் நேற்று சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது. கறிக்கடைக்காரர்கள் மட்டுமே ஆடுகளை வாங்க சந்தைக்கு வந்திருந்தனர். அவர்களும் ஆடுகளை குறைந்த விலைக்கு கேட்டதால் ஆடு வளர்ப்போர் விற்பதற்கு மனமில்லாமல் மீண்டும் வீட்டிற்கே கொண்டு சென்றனர். விராலிமலை வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகம் இருந்தபோதும் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று செலவு செய்து ஆடுகளை வாகனங்களில் ஏற்றி வந்த வியாபாரிகள் விரக்தி அடைந்தனர்.

இதுகுறித்து ஆடு வியாபாரி ஒருவர் கூறுகையில், கால்நடைகளுக்கு இதுபோல் வரும் நோய்களை கட்டுப்படுத்த கால்நடை துறையினர் கிராம பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், மேலும் கால்நடை வளர்ப்போருக்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றார்.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா