×

திருவரங்குளம் வட்டாரத்தில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி

புதுக்கோட்டை, டிச.14: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ராம.சிவகுமார் தலைமையில் விவசாயிகளுக்கு கிராமப் பயிற்சி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் குறுந்தடிமனை கிராமத்தில் விவசாயிகளுக்குக் கிராம அளவிலான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்துகொண்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். குறிப்பாக நுண்ணீர்ப் பாசனத்தில் சேர்ந்து சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்து பாசன நீரினைச் சிக்கனப்படுத்திடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகள் மண்வள அடிப்படையில் உரம் இடுவதனால் உரச் செலவு குறைவதோடு பூச்சி நோய்த் தாக்குதல் குறைவதாகவும் எடுத்துக் கூறினார்.

பயிற்சியில் கலந்துகொண்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மைத் துணை இயக்குநர் பெரியசாமி ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து கூட்டுப் பண்ணையம் போன்ற திட்டங்கள் வாயிலாக மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதனால் அதிக இலாபம் ஈட்டலாம் என எடுத்துக்கூறினார்.

விவசாயிகள் அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லா உணவு உற்பத்தி மேற்கொள்ள உயிரியல் காரணிகள். சூரிய விளக்குப் பொறி. இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் மஞ்சள்நிற ஒட்டுபொறி ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து வேளாண்மை அலுவலர் முகமது ரபி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக்கூறினார். பயிற்சியில் உழவர் மன்ற அமைப்பாளர் செல்வி கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பமான உயிர் உர விதை நேர்த்தியைச் செயல்விளக்கமாகச் செய்து காண்பித்தார். விவசாயிகளுக்குத் தொழில்நுட்பக் கையேடுகள் வழங்கப்பட்டன.

Tags : Farmers Training Center ,Thiruvarangulam ,
× RELATED பண்ணைய முறையில் வேளாண்மை உற்பத்தியை பெருக்க அறிவுறுத்தல்