பெரம்பலூர்,டிச.14: பெரம்பலூர் அருகே ஆதனூரில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என கூறி டிஎஸ்பி வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் நேற்று முன்தினம் இரவு ஆலத்தூர் தாலுகாவில் ஆதனூர்-குன்னம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஆதனூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை அழைத்து விசாரணை நடத்தினார். அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, குளத்தூர், தெற்குத்தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் சரத்குமார் (21), கோவை மாவட்டம், காரமடையை அடுத்த காண்ணார் பாளையம் ஆரோக்கிய சாமி மகன் செபஷ்டி ராஜேந்திரன், திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, அழுந்தலைப்பூர், பரமசிவம் மகன் மாவேந்தன்(21) என தெரியவந்தது.