திருக்கோவிலூர் அருகே 4 நாட்களுக்கு முன் காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்பு

திருக்கோவிலூர், டிச. 14: திருக்கோவிலூர் அருகே 4 நாட்களுக்கு முன் காணாமல் போன வாலிபர் தென்பெண்ணையாற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.  விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி.தேவனூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் குரு (36), அவரது நண்பருடன் சேர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் துரிஞ்சல் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில், ஒரு பக்கக் கரையில் இருந்த அவர்களது நண்பர்கள் சென்றுவிட, இவர் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறினாராம். இந்நிலையில், அன்று இரவாகியும் குரு வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

பின்னர், குருவின் நண்பர்களும் ஊர் பொதுமக்களும் கடந்த 3 நாட்களாக தென்பெண்ணை ஆற்று பகுதியில் குருவைத் தேடி வந்த நிலையில், நேற்று மதியம் டி.தேவனூர் கூட்டு சாலை அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் குரு சடலமாக கிடப்பதை அவரது நண்பர்கள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அரகண்டநல்லூர் போலீசாருக்கும், திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியோடு குருவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: