திருப்போரூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்.எல்.ஏ. பாலாஜி, ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், துணைத் தலைவர் சத்யா சேகர், மாவட்டக்குழு துணைத்தலைவர் காயத்ரி அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையாளர் பரிமளா வரவேற்றார். தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். கானத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை அளவீடு செய்து தரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். மடையத்தூர் ஊராட்சியில் 20 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர் சித்ரா தட்சிணாமூர்த்தி மனு அளித்தார். புதுப்பாக்கம் ஊராட்சியில் கால்வாய், குளம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அதேபோன்று பல்வேறு ஊராட்சிகளில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாசன வாய்க்கால் சீரமைத்தல், வீட்டு மனைப் பட்டா கோருதல், விதவை, முதியோர் உதவித்தொகை கோருதல் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மன்றக்கூடம், ஒன்றியக்குழுத் தலைவர் அறை ஆகியவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் இனி வருங்காலங்களில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்படும். அதனால் பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரத்தேவையில்லை. அந்தந்த ஒன்றிய அலுவலகத்திலேயே மனுக்களை அளிக்கலாம் என்றார்.

''விசிக எம்எல்ஏ பாராட்டு''

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மனு அளிக்க 1000 பேருக்கு மேல் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி.க.) பேசும்போது இந்தளவுக்கு கூட்டம் எந்த குறை தீர்க்கும் முகாமிற்கும் வந்ததில்லை. அதனால், இந்தளவுக்கு குறை இருக்கிறதோ என்று எண்ணிட வேண்டாம். நமது குறைகளை இந்த ஆட்சியில் தெரிவித்தால்தான் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொது மக்களுக்கு வந்திருக்கிறது. அதனால்தான் நீண்ட காலமாக தீர்க்கப்படாத தங்களது பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள மக்கள் வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையை வீணாக்காமல் இந்த முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு வழங்கப்படும் என்றார். இதற்கு பொதுமக்களிடையே பலத்த கைதட்டல் எழுந்தது.

Related Stories: