17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் சிறுவாபுரி கிராமத்தில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள், செவ்வாய்கிழமை, கிருத்திகை ஆகிய நாட்களில் 30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் திருமண தடை, வீடு கட்டுதல், புத்திர பாக்கியம் போன்ற நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இக்கோயிலில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு வந்து கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் 3.75 கோடி செலவில் குளம் சீரமைக்கு பணி, 38 லட்சம் செலவில் கருங்கல் தரை அமைக்கும் பணி, 40 லட்சம் செலவில்  வர்ணம் பூசும் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சிறுவாபுரி முருகன் கோயில் 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 2015ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால், கும்பாபிஷேகம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்ாலின் கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல்  மாதத்தில் இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, கோயிலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த ₹53 லட்சம் செலவில் பார்க்கிங் அமைக்கப்படும். 38 லட்சம் செலவில் கருக்கல் அமைக்கும் பணி, 40 லட்சம் செலவில் வர்ணம் பூசும் பணி, 3.75 லட்சம் செலவில் குளம் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயராமன், எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், கோயில் செயல் அலுவலர்கள் நாராயணன், பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: