நகை கடை கொள்ளை வழக்கில் ஆந்திர கும்பலுக்கு தொடர்பு

கிருஷ்ணகிரி, டிச.13: பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி கிராமத்தில், கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த குமார்(41), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ்(24) ஆகியோர் சிறிய அளவில் தங்க, வெள்ளி கடைகளை நடத்தி வருகின்றனர். கட்டிடத்தின் உரிமையாளர் கேசவன், அதேபகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு, அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவில் சிலர் கதவை தட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான கேசவன் கதவை திறந்தபோது முகமூடி அணிந்த 7 பேர் கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் கேசவனை மிரட்டி, உன் வீட்டின் சுவரை துளையிட்டு, அதன் வழியாக நகை கடையின் உள்ளே போகிறோம் எனக்கூறி கேசவனை அருகில் உள்ள அறையில் வைத்து பூட்டிய கும்பல், அவரது செல்போனை உடைத்துள்ளனர்.

பின்னர் அவரது வீட்டின் சுவரை துளையிட்டு, ஒரு நகைக்கடையின் உள்ளேயும், மற்றொரு நகை கடையில் பின்புறமாக துளை போட்டும் நுழைந்தனர். பின்னர் 2 கடைகளில் இருந்தும் 12 கிலோ வெள்ளி, 23 பவுன் தங்க நகைகள், ரொக்கம் என ₹20 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கொள்ளை சம்பவத்தை பார்த்து கேசவனை அறைக்குள் சென்று பொதுமக்கள் மீட்டனர். இதுகுறித்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த கடைகளில் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளையர்கள் தெலுங்கு மொழியில் பேசியதால் அவர்கள் ஆந்திர மாநில குப்பம் பகுதியை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, பர்கூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சுற்றியுள்ள ஊர்களில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: