திருச்சியில் நடந்த முதலிடம் பிடித்தவர்களுக்கு தெற்காசிய போட்டியில் வாய்ப்பு

திருச்சி, டிச.13: திருச்சியில் சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நேற்று நடந்தது. தமிழக சிறப்பு ஒலிம்பிக் பாரத்தின் இயக்குநர் மற்றும் செயலாளர், மேலும் தேசிய கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்னாபாலாஜி சிலம்பப் போட்டியை துவக்கி வைத்தார். இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட சிலம்பம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் போர்ச்சிலம்பம், அலங்காரச்சிலம்பம், இரட்டைச்சிலம்பம், தொடு சிலம்பம் என்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தினால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் சிலம்ப வீராங்கனைகள் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய மற்றும் ஆசிய சிலம்ப போட்டிகளில் பங்குபெற வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் பேசிய சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சங்கர், நமது பாரம்பரியக் கலையான சிலம்பக்கலையை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும். மேலும் சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கும் அயல்நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: