விடுமுறை தினத்தையொட்டி வைகை அணைப் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பிரமாண்ட நீர்த்தேக்கத்தை கண்டுகளித்தனர்

ஆண்டிபட்டி, டிச. 13: விடுமுறை தினத்தையொட்டி, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து பொழுது போக்கினர். நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையின் பிரமாண்ட நீர்த்தேக்கத்தை கண்டுகளித்தனர். ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் பூங்கா உள்ளது. ஆற்றின் இருபுறம் அமைந்துள்ள இப்பூங்காவை வலதுகரைப் பூங்கா மற்றும் இடதுகரைப் பூங்கா என பிரித்துள்ளனர். இவைகளில் சிறுவர் பூங்கா, பெரியாறு மாதிரி வைகைப் பூங்கா, பயில்வான் பார்க், யானைச் சறுக்கல், படகுகுழாம், இசை நடன நீருற்று, ஓய்விடங்கள், புல்தரைகள், உல்லாச ரயில் என ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.

 இங்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக இப்பூங்கா விளங்கி வருகிறது. தேனி மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாடகளாக மழை குறைந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். முழுக்கொள்ளவை எட்டியுள்ள அணையின் பிரம்மாண்டமா நீர்தேக்கப் பகுதியை கண்டு களித்தனர்.

மேலும், அணையில் இருந்த அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், இரண்டு கரைகளையும் இணைக்கும் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால், மறுகரைப் பூங்காவிற்கு சுற்றிச் செல்கின்றனர். அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பூங்கா பகுதியில் பொதுப்பணித்துறை பணியாளர்களும், வைகை அணைப் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: