தேனியில் விபத்துகளை தவிர்க்க பைபாஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை

தேனி, டிச. 13: தேனி பைபாஸ் சாலையில் விபத்துக்களை தவிர்க்க, சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனியில் புதிய பஸ்நிலையத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் பைபாஸ் சாலை ரிசர்வ் பாரஸ்ட்டின் மத்தியில் சுமார் 4.5 கி.மீ தூரத்திற்கு அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை வழியாக திண்டுக்கல், திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும், புதிய பஸ்நிலையம் அருகே கலெக்டர் அலுவலகம், அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் ஏராளமானோர் டூவீலர்களில் பைபாஸ் சாலை வழியாக பயணிக்கின்றனர்.

இதனால், பைபாஸ் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலையில் மின்விளக்கு வசதியில்லாததால், இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்லும்போது, சாலையோரத்தில் செல்லும் டூவீலர்கள் விபத்தில் சிக்குகின்றன. இதனால், விபத்தை தவிர்க்க 7 மீட்டர் அகலமுள்ள இந்த சாலையை 10 மீட்டர் சாலையாக விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அன்னஞ்சி பிரிவில் இருந்து சாலையை அகலப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2019ல் பணிகள் தொடங்கின.

ஆனால், அன்னஞ்சி பிரிவில் இருந்து சிங்கப்பாறை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ள பகுதியில் சாலையை அகலப்படுத்த வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், தனியார் பள்ளி அருகே சாலை அகலப்படுத்தும் பணி நடக்காமல் கடந்த 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், விபத்துகள் தொடர்கின்றன. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, அன்னஞ்சி விலக்கில் இருந்து 4.5 கிமீ தூர சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: