11 வருடங்களுக்கு பிறகு மழையால் நிரம்பிய பெருமாள் கோயில் குளம் மலர் தூவி வழிபாடு

சின்னாளபட்டி, டிச.13: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கதிர்நரசிங்க பெருமாள் கோயில் பின்புறம் உள்ளது பெருமாள் கோவில் குளம். 102 ஏக்கர் நீர் பரப்புள்ள இந்த குளம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. கடந்த திமுக ஆட்சியின் போது நிரம்பிய இந்த குளம் அதன் பின்னர் நிரம்பவில்லை. தற்போது குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்வதால் ரெட்டியார்சத்திரத்திற்கு வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

நேற்று கொத்தப்புள்ளி ஊராட்சி நிர்வாகம் சார்பாக தண்ணீர் மறுகால் போனதற்கு வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரி அன்பரசு தலைமை தாங்கினார். ஒன்றிய துணை தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், ஊராட்சிமன்ற துணைத்தலைவர் எம்.வி.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான ஒன்றிய தலைவர் சிவகுருசாமி தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மலர் தூவி வழிபாடு செய்தனர்.

நிகழ்ச்சியில் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அருணாசலம், செயலாளர் உதயக்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செல்வராஜன், கோயில் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் பஞ்சவர்ணம் பரமன், பாலசுப்பிரமணியன், கண்ணன், உட்பட திமுக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். கோயில் குளம் நிரம்பி தண்ணீர் பாய்வதால் சில்வார்பட்டி ஊராட்சி பழைய குளம், புதுக்குளம், கோனார்குளம், மந்தைகுளம், அய்யன்குளம் உட்பட 7 குளங்களுக்கு தண்ணீர் வரும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: