×

காந்திகிராம கிராமிய பல்கலையில் சர்வதேச குறும்பட விழா

சின்னாளபட்டி, டிச.13: காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலையில் சர்வதேசத் திரைப்பட விழாவை பல்கலை துணைவேந்தர் (பொ) ரெங்கநாதன் துவக்கி வைத்தார். காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ், இந்திய மொழிகள், கிராமியக் கலைகள் புலம் மற்றும் மதுரை மறுபக்கம் ஊடக செயல்பாட்டுக் குழு இணைந்து 23வது மதுரை சர்வதேச ஆவண குறும்படத் திரைப்பட விழா  பல்கலைக்கழகத் தமிழ்த்துறை கருத்தரங்க அரங்கில் நடத்தினார்கள். தொடக்க விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொ.) ரங்கநாதன் தலைமை தாங்கி திரைப்பட விழாக் கையேட்டினை வெளியிட்டு கூறுகையில், ‘‘இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தரும் ஊடகமாக ஆவண-குறும்படங்கள் விளங்குகின்றன. பெ

ரிய தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமலேயே கைபேசி மூலமாகக் கூட குறும்படத்தைத் தயாரிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. குறும்படங்கள் இதுவரையிலும் பேசாத புதிய பொருளைப் பேசுகின்றன. சமூக மாற்றத்திற்கு உதவுகின்றன என்று குறிப்பிட்டார். மூத்த ஆவணப் பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், மாற்றுத் திரைப்பட இயக்கமாக விளங்குகின்ற ஆவண-குறும்படங்கள் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். அதன் மூலம் புதிய இயக்குநர்கள் உருவாவார்கள் என்றார்.

வாழ்த்துரை வழங்கிய குறும்பட இயக்குநர் மயன் (எ)மகேஸ் யோகானந்த், மூத்த கலை இலக்கிய ஆளுமைகளை ஆவணப்படமாக்குவது காலத்தின் தேவை என்றார். பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். நிறைவாக மறுபக்க அமைப்பின் இயக்குநர் அமுதன் நன்றி கூறினார். திரைப்பட விழாவில் நந்தன் இயக்கிய ‘சொற்களைக் கனவு காணுதல், மயன் இயக்கிய விழுமிய பயணம்’ ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கிய ‘ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நாகரிகம்’ ஆகிய ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களும் ஆய்வாளர்களும் விவாதங்களில் கலந்து கொண்டனர்.

Tags : International Short Film Festival ,Gandhigram Rural University ,
× RELATED காந்திகிராம் பல்கலையில் இந்திய யோகா தர நிர்ணய கூட்டம்