லோக் அதாலத் மூலம் ரூ.15.02 கோடி மதிப்பிலான 1,507 வழக்குகளுக்கு தீர்வு

ஈரோடு,டிச.13: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 19 குழுக்கள் அமைக்கப்பட்டு லோக் அதலாத் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முருகேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதிகள் முரளிதரன், மாலதி, பார்த்தசாரதி, ஜோதி, குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் புஷ்பராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த லோக் அதலாத்தில் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து பிரச்னை, விபத்து காப்பீடு, காசோலை மோசடி என மொத்தம் 5,560 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.15கோடியே 2லட்சத்து 81ஆயிரத்து 942 மதிப்பிலான 1,361 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. முன்னதாக, மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றில் ரூ.4லட்சம் இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி  முருகேசன் முன்னிலையில் வழங்கப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர்(பொறுப்பு) கோபிநாத் செய்திருந்தார்.

Related Stories: