கோட்டை பெருமாள் கோயிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ஈரோடு, டிச. 13: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை (14ம் தேதி) சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கோட்டையில் உள்ள கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில், திருச்சி  ரங்கத்தை போலவே பஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பகல் பத்து, ராப்பத்து என 21 நாள் இவ்விழா நடைபெறும்.

இதேபோல், நடப்பாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 4ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி இன்று(13ம்தேதி) நிறைவடைய உள்ளது. இன்று மாலை மூலவர் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார். இன்று இரவு 9 மணி முதல் நாளை(14ம் தேதி) காலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. விழாவின் முக்கிய நிகழ்வான நாளை(14ம் தேதி) அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசலுக்கு அதிகாலை 3 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் பணியாளர்கள், பட்டாச்சாரியார்கள் கொண்டு நடத்தப்படும். பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் முடிந்ததும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் சுவாமி தரினசத்திற்கு அனுமதிக்கப்ட உள்ளனர். இதற்கான முன்னெற்பாடுகள் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளை இரவு முதல் 23ம் தேதி வரை ராப்பத்து உற்சவமும், முத்தங்கி சேவையும், 23ம் தேதி இரவு நம்மாழ்வார் மோட்சம் அடையும் நிகழ்ச்சியும், திருவாசல் சாற்று முறை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: