×

குமரியில் புழுதி பறக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆஸ்துமா, கண் எரிச்சலால் கடும் அவதி

நாகர்கோவில், டிச.13:  குமரியில் தேசிய நெடுஞ்சாலை களில் புழுதி பறப்பதால்  மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குமரி மாவட்டத்தில் என்.எச்.7, என்.எச்.-47 மற்றும் என்.எச்.- 47 பி (புதிய எண் என்.எச்.-44 என்.எச். 66, என்.எச்.-944) ஆகிய மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. என்.எச்.-44 , என்.எச்.-66, என்.எச்.-944 களியக்காவிளை - நாகர்கோவில் - காவல்கிணறு சாலை ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பெரும்பாலான சரக்கு வாகனங்களும் இந்த சாலைகளில் பயணிக்கின்றன. நாள் தோறும் சாலை மார்க்கமாக, ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இந்த சாலையில் தான் செல்கிறார்கள். மிக முக்கியமான இந்த தேசிய நெடுஞ்சாலைகள் தற்போது கிராமப்புற சாலைகளை விட மோசமாக கிடக்கின்றன. ஆரல்வாய்மொழியில் தொடங்கி களியக்காவிளை வரை உள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குண்டு, குழிகளில் விழுந்து வாகனங்கள் சிக்கி திணறுகின்றன.

தோவாளை, வெள்ளமடம், ஒழுகினசேரி, வடசேரி, சுங்கான்கடை, தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை பகுதிகளில் சாலைகள் நொறுங்கி புழுதி பறக்கிறது. கனரக வாகனங்கள் செல்லும் போது பறக்கும் புழுதியால் பைக் ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எதிரே வரும் வாகனம் தெரியாத அளவுக்கு புழுதி பறப்பதால், விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளது. நகருக்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலை கூட மோசமாக கிடப்பது, பொதுமக்களை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இந்த சாலைகளில்  பறக்கும் புழுதியால், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் நிலை உள்ளது.  பைக் மற்றும் பஸ்கள், ஆட்டோக்களில் செல்லும் குழந்தைகள், பெரியவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பொருட்கள் மற்றும் பொருட்களில் புழுதி படிந்துள்ளது. அதை பொதுமக்கள் வாங்கி உட்கொள்ளும் நிலையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார்.  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்தும் மனு அளித்துள்ளார். களியக்காவிளை - நாகர்கோவில் - காவல்கிணறு சாலையை விரைவாக செப்பனிட வேண்டும். இந்த பணிகளுடன் நாகர்கோவில்  பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மேம்பாலங்களை வலுப்படுத்துதல் மற்றும் சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் எனவும் கூறி இருப்பதுடன், புதிதாக அமைக்கப்பட்டு வரும் காவல்கிணறு முதல் களியக்காவிளை வரையிலான நான்கு வழி சாலை திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்கவேண்டும் என கூறி உள்ளார். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான  நிலையில் தொடர்வது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி உள்ளது. விபத்துக்கள்,  உயிர் பலிகள் என்ற அபாயம் உள்ளதால், உடனடியாக தேசிய நெடுஞ்சாலைகளில்  குண்டு, குழிகளையாவது சீரமைத்து, புழுதி பிரச்னைக்கு மாவட்ட  நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகாரிகள் மீது போலீசில் புகார்
நாம் தமிழர் கட்சியின் நாகர்கோவில் தொகுதி மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் கோட்டார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நகர்ப்புற சாலைகள் மோசமாக பழுதடைந்து கிடப்பதால், விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கனரக வாகனங்கள் செல்வதால் தூசி சூழ்ந்து உணவகங்கள், தேநீர் கடைகளில் உள்ள உணவு பொருட்களில் படிகின்றன. அவற்றை மக்கள் சாப்பிடும் போது நோய் பரவுகிறது. குழந்தைகள், வயதானவர்களுக்கு மூச்சு திணறல், இருமல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்த பிரச்னையில் அலட்சியமாக இருக்கும்  தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் (நாகர்கோவில் பிரிவு) ஜெகன்மோகன், மாவட்ட சுற்றுசூழல் அதிகாரி கிருபானந்தராஜன், நாகர்கோவில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் விஜய சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Tags : Dusty National Highway ,Kumari ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...