×

(வேலூர்) மார்க்கபந்தீஸ்வரர் கோயில் கடை ஞாயிறு பெரு விழா கோலாகலம் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டிய பெண்கள்

பள்ளிகொண்டா, டிச.13: பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கடைசி ஞாயிறு பெருவிழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை கடைசி ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களின்றி சிம்ம குளம் திறக்கப்பட்டது. மேலும், மார்க்கபந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று நள்ளிரவு 1 மணிக்கு கோயிலின் ராஜகோபுர நடை சாத்தப்பட்டது. அதன்பிறகு மறுநாள் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் ராஜகோபுர நடை திறக்கப்பட்டு மார்க்கபந்தீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் 180 பேர் முதல்கட்டமாக தரிசனத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.

அதன்பிறகு, பதிவு செய்யாதவர்கள் ஏராளமானோர் வந்ததால் அவர்களையும் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை தனி வரிசையில் தரிசனம் செய்ய அனுமதித்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக குழந்தை வரம் வேண்டி வந்த பெண்கள் ஷவர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளத்து நீரில் நீராடிவிட்டு கோயில் வளாகத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக படுத்துறங்கி அதன்பின்பு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கற்பூரம் தேங்காய் பூக்கள் பழங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றுவதற்காக கோயிலின் வெளி பிரகாரத்தில் கொடி மரம் அருகே கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட வேலூர் மண்டல உதவி ஆணையர் விஜியா அலுவலக நிர்வாகிகளையும், உறுதுணையாக இருந்த கோயில் ஊழியர்களையும் பாராட்டினார். தடையை மீறி எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க ஏஎஸ்பி ஆல்பர்ட ஜான் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags : Vellore ,Markabandheeswarar Temple Shop ,Sunday Peru Festival ,Kolagalam ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...