×

திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிக்க அறநிலையத்துறையில் தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம் ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

வேலூர், டிச.13:தமிழகம் முழுவதும் 10 இணை ஆணையர் மண்டலங்களிலும் திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிக்க தொகுப்பூதிய அடிப்படையில் ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோயில்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்தவை. இத்திருக்கோயில்கள் கட்டிட கலையின் சிறப்புகளை பறைசாற்றுவதுடன், தமிழர் நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன.

மேலும், பல்வேறு திருக்கோயில்களில் மூலிகை ஓவியங்களும், வரலாற்று தகவல் அடங்கிய கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றை முறையாக பராமரித்து, பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிக்க அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஓய்வு பெற்ற தொல்லியல்துறை அலுவலர்களை, தொல்லியல் ஆலோசகர்களாக தொகுப்பூதிய அடிப்படையில் 10 இணை ஆணையர் மண்டலங்களுக்கும் தலா ஒருவர் என நியமித்துள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்ட தொல்லியல் ஆலோசகர்களுக்கான பணி தொடர்பான நிபந்தனைகளும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் கே.தரன், ஈரோடு மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை உதவி இயக்குனர் தி.சுப்பிரமணியன், சேலம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை மண்டல உதவி இயக்குனர் ச.செல்வராஜ், தஞ்சாவூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல்துறை உதவி கண்காணிப்பாளர் பி.வாசுதேவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வேலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை பதிவு அலுவலர் மா.கலைவாணன், விழுப்புரம் மண்டலத்துக்கு மத்திய தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.தண்டபாணி, திருவண்ணாமலை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் பி.வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருச்சி மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை உதவி இயக்குனர் நா.கணேசன், மதுரை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை வல்லுனர் சோ.சாந்தலிங்கம், கடலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை காப்பாட்சியர் சா.பரணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட தொல்லியல் ஆலோசகர்களுக்கான மாதாந்திர ஊதியமாக ₹50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியத்தை முறையே மாங்காடு காமாட்சியம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், ரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், கடலூர் பாடலீஸ்வரர் கோயில் என 10 திருக்கோயில்கள் நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

Tags : Commissioner ,Kumarakuruparan ,Treasury Department ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...