×

சென்னையில் வரும் 18ம் தேதி கூட்டம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆலோசனை ஜி.கே.வாசன் பேட்டி

தண்டராம்பட்டு, டிச.13: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் வரும் 18ம் தேதி நடக்கும் கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அடுத்த ரெட்டியாபாளையத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து, கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றினார். பின்னர், நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். திருவண்ணாமலை- அரூர் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். தானிப்பாடியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொரோனாவுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் முழுமையாக நடக்க வேண்டும். சட்ட மசோதாக்கள் அனைத்தும் விவாதம் செய்து நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சிகள் அவையை முடக்கக்கூடாது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், மற்ற மொழிகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை குறைக்க கூடாது. பாஜ அரசு 100 சதவீதம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் விவசாயிகளுக்காக புதிய சட்ட மசோதா விரைவில் நிறைவேற்றும். இவ்வாறு, அவர் கூறினார். அப்போது, மாவட்ட தலைவர் ராயர் கிருஷ்ணமூர்த்தி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் அறவாழி, மாநில இளைஞரணி இணை செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : GK Vasan ,Chennai ,
× RELATED தென்சென்னை தொகுதி வாக்காளர்களின்...