நகர கூட்டுறவு வங்கி ஆண்டு பேரவை கூட்டம் ஆண்டறிக்கை புத்தகத்தில் கொறடா, எம்எல்ஏ படம் இல்லை

தஞ்சை, டிச.13: தஞ்சை நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி ஆண்டு பேரவை கூட்டத்தில் ஆண்டறிக்கை புத்தகத்தில் கொறடா, எம்எல்ஏ படங்கள் அச்சிடப்படவில்லை. இதை கேட்ட திமுகவினரை அதிகாரி சமரசம் செய்தார். தஞ்சையில் நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி 116-வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. வங்கி தலைவர் (பொ)சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் அன்புச்செல்வி மற்றும் கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் ஆண்டு அறிக்கையை வெளியிட்டனர். ஆண்டறிக்கை புத்தகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் வங்கி நிர்வாகிகள் படங்கள் இடம் பெற்றிருந்தது.

ஆனால் தஞ்சை தொகுதி எம்.பி. பழனிமாணிக்கம், எம்எல்ஏ. டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் படங்கள் இடம் பெறவில்லை என கூறி திமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அப்போது கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் அன்புசெல்வி உடனடியாக புத்தகத்தில் எம்.பி, எம்எல்ஏ, கொறடா படம் அச்சிடப்படும். இனி இதுபோல் தவறு நடக்காது என்று கூறினார். இருப்பினும் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது. பின்னர் திமுகவினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: