திருமயம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 வாலிபர் உடல் அடையாளம் தெரிந்தது

திருமயம், டிச.13: திருமயம் அருகே நேற்றுமுன்தினம் நடந்த சாலை விபத்தில் இறந்த 2 இளைஞர்கள் உடல் அடையாளம் தெரிந்தது. காரைக்குடியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் ஈரோடு நோக்கி சென்ற அரசு பஸ் திருமயம் அடுத்துள்ள பாம்பாறு பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூ வீலர் பஸ்சுக்கு அடியில் அடியில் சிக்கிக் கொண்டதால் சிறிது தூரம் சாலையில் இழுத்து செல்லப்பட்ட பைக்கின் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. இதனைத் தொடர்ந்து தீ மளமளவென பஸ்சுக்கும் பரவியதால் பஸ்ஸில் இருந்த 17 பயணிகள் உட்பட 19 பேர் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி உயிர் தப்பினர். மேலும் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களில் ஒருவர் உடல் கருகியும், மற்றொருவர் பலத்த காயத்துடன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் போலீசார் இறந்தவர்களை அடையாளம் தெரியாமல் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் இறந்துபோனவர்கள் புதுக்கோட்டை சின்னையா சத்திரம் ராஜாங்கம் மகன் செல்வம்(22), காரைக்குடியைச் சேர்ந்த கலையரசன் மகன் மணிகண்டன் என தெரியவந்தது. இருவரும் புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றதாகவும், பைக்கை மணிகண்டன் ஓட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து பஸ் டிரைவர் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செல்வம், மணிகண்டன் ஆகியோரது உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: