ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி, ராணுவ வீரர்களுக்கு வர்த்தக சங்கத்தினர் மலரஞ்சலி

அறந்தாங்கி, டிச.11: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட விபத்தில் பலியான ராணுவவீரர்களுக்கு அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் அஞ்சலி செலுத்தி மவுன ஊர்வலம் நடத்தினர். குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் சார்பில் அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கி, உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்களின் உருவப் படங்கள் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். செயலாளர் மாருதி தவசுமணி, பொருளாளர் சேக்அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, அறந்தாங்கி செக்போஸ்ட் அருகில் இருந்து அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் தலைவர் காமராஜ் தலைமையில் மவுன ஊர்வலமாக அம்மா உணவகத்தை அடைந்தனர். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: