×

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் வார்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

திருச்சி, டிச.11: திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் வார்டில் நேற்று விமானத்தில் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இந்நிலையில் இந்த கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரான் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்திட இந்திய சுகாதாரத்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் வார்டு துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 32 படுக்கை வசதிகளுடன் ஒமிக்ரான் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 8 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 3ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் ஒமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து விமானம் மூலம் வந்த மற்றொருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று விமானத்தில் வந்த இளைஞர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒமிக்ரான் வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பின்னரே ஒமிக்ரான் வைரஸ் தாக்கியுள்ளதா என்ற விபரம் தெரியவரும்.  ஏற்கனவே இருந்த 2 பேருக்கும் ஒமிக்ரான் பரிசோனை முடிவுகள் இன்னும் வரவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Omigron Ward ,Trichy Government Medical College Hospital ,
× RELATED திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி...