×

செய்யாறு அருகே நண்பர்களுடன் குறித்தபோது ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவன் தேடுதலில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

செய்யாறு, டிச.11:  செய்யாறு அருகே ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி மாணவனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டம் சிறுநாவல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தன் மகன் பாலமுருகன்(14), தர் மகன் ஜெகதீசன்(14), படவேட்டான் மகன் யுகேஷ்(14). இவர்கள் 3 பேரும் வடஇலுப்பை அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் 3 மாணவர்களும் இணைந்து சித்தனக்கால் கிராமம் அருகே செல்லும் பாலாற்றில் குளித்து கொண்டிருந்தனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது வெள்ளத்தில் பாலமுருகன் அடித்துச்செல்லப்பட்டார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட அப்பகுதிமக்கள் அங்கு விரைந்து சென்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பாலமுருகனை தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் வெம்பாக்கம் தாசில்தார் சத்தியன் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், செய்யாறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பாலமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாலை 6 மணிக்கு பிறகு இருட்டிவிட்டதால் தேடும் பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை தேடுதல் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட உள்ளனர்.

Tags : Seiyaru ,
× RELATED செய்யாறு அருகே அரசு...