×

சாக்கோட்டை யூனியனில் 96 ஆயிரம் பனை விதை நடும் பணி துவக்கம்: ஆணையர் தகவல்

காரைக்குடி, டிச, 11: காரைக்குடி  அருகே சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. மேலாளர் ராஜேன்திரகுமார்  வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை வகிக்க, துணை  தலைவர் கார்த்தி, ஆணையர் கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா முன்னிலை  வகித்தனர். கூட்டத்தில் ஆணையர் கேசவன் கூறுகையில், ‘நீர்நிலைகளை பாதுகாக்க  தமிழக அரசு பனை விதைகளை நட உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒன்றியத்திற்குட்பட்ட  அனைத்து கிராம கண்மாய் கரைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் 96 ஆயிரம் பனை  விதைகள் நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரித்து  வளர்க்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். சங்கராபுரம் ஊராட்சியில்  அனைவரின் ஒத்துழைப்போடு டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.  

தொடர்ந்து  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசியதாவது: சொக்கலிங்கம்: டென்டர்  விடப்பட்டும் இதுவரை துவங்காத திட்ட பணிகளை உடனே துவங்க வேண்டும்.  தேவிமீனாள்: ஊராட்சிகளில் நடக்கும் பணிகளை அந்தந்த ஒன்றியக்குழு  உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். சுப்பிரமணியன்: கொசுவை ஒழிக்க  அதிகளவில் மருந்து வழங்க வேண்டும். ராமச்சந்திரன்: பிரதமரின் வீடு கட்டும்  திட்டத்தில் பயனாளிகளுக்கு இன்னும் பணம் வராமல் உள்ளது. பணத்தை விரைவில்  பெற்று தர வேண்டும்.

பின்னர் ஒன்றியகுழு தலைவர் பேசுகையில்,  ‘மழைகாலங்களில் துரிதமாக செயல்பட்ட அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,  அதிகாரிகளுக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். மழைக்கால தொற்றுநோய்  பரவாமல் பராமரிப்பு பணிகளை அந்தந்த ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டும்’  என்றார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, திவ்யா, மண்டல  துணை வட்டாட்சியர்கள் பொன்னுச்சாமி, ரீகன், சிவா, சந்தானம், ஒன்றிய  பொறியாளர்கள் திருமேனிநாதன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Sakkottai Union ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது