செல்வீப் நகர் பகுதிக்கு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை

ஊட்டி, டிச. 11: செல்வீப் நகர் பகுதிக்கு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி அருகேயுள்ள செல்வீப் நகர் பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் தோட்டி தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள முத்தோரை பாலாடா, அதிகரட்டி போன்ற பள்ளிகளுக்கு சென்று பயன்று வருகின்றனர். காட்டேரி டேம் - முட்டிநாடு சாலையில் இருந்து இந்த கிராமத்தை இணைக்கும் பகுதி சுமார் 200 மீட்டர் தூரம் விவசாய நிலமாக உள்ளது. இது தனியார் நிலம் என்பதால், கடந்த 25 ஆண்டுகளாக நடைபாதை அமைக்க முடியாத நிலை உள்ளது.

இதனால், இந்த கிராம மக்கள் மழைக்காலங்களில் விவசாய நிலங்களுக்கு நடவே நடந்துச் செல்லும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பள்ளிச் செல்லும் குழந்தைகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். செல்வீப் நகர் பகுதிக்கு நிரந்தர நடைபாதை வசதி ஏற்படுத்தத்தர வேண்டும் என அதிகரட்டி பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், யாரும் கண்டுக் கொண்டதாக இல்லை. இதனால், இந்த கிராம மக்கள் தற்போது கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதிக்கு கான்கிரீட் நடைபாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்ள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: