×

தூத்துக்குடி அருகே மடத்தூரில் சர்ச் கட்ட மாநகராட்சி தடை சபை மக்கள் திரண்டதால் பரபரப்பு

தூத்துக்குடி, டிச. 11: தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தின் கீழ் தூத்துக்குடி,மில்லர்புரம் சேகரத்துக்குட்பட்ட மடத்தூரில் கடந்த 1850ம் ஆண்டு சி.எஸ்.ஐ தூய பிரசன்ன ஆலயம் உருவானது. பின்னர் 1906ம் ஆண்டு இந்த ஆலயத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1998ம் ஆண்டு மீண்டும் ஆலயம் புதுப்பித்து கட்டப்பட்டது. தற்போது தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் இந்த ஆலயம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்து கட்டுவதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த ஆலயத்தை கட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் சில மாதங்களாக கட்டுமான பணி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு ஆலய பணிகளை முடிக்க வேண்டும் என்று பணிகளை தொடங்கினர். இதற்கிடையே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன் அனுமதி பெறாமல் கட்டிட வேலையை நடத்துவது சட்டபடி குற்றமாகும். எனவே கட்டிட வேலையை உடனே நிறுத்தி கட்டிடத்தை அப்புறப்படுத்தாத பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப்படும் என்று நோட்டீஸ் அளித்துள்ளது. இதையறிந்த சபை மக்கள் நேற்று மாலை ஆலயத்தின் முன்பு திரண்டனர். அவர்களிடம் மில்லர்புரம் சேகரத்தலைவர் சைமன் தர்மராஜ், நாம் இது குறித்து அதிகாரிகளுக்கு முறையாக விண்ணப்பம் அளித்துள்ளோம்.

எனவே விரைவில் முறையான அனுமதி கிடைக்கும் என்று மக்களிடம் உறுதியளித்தார். ஆனால் சபைமக்கள் இதுகுறித்து தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து ஆலயத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் சபை மக்கள் சார்பில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் கிருபாகரன் ஜோசப் மற்றும் புஷ்பரதி ஆகியோர் கூறியதாவது: சுமார் 171 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தை புதுப்பிக்க சபை மக்கள் முடிவு செய்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை தொடங்கினோம். இந்த ஆலயத்தால் யாருக்கும் இடையூறு கிடையாது. ஆலயம் சி.எஸ்.ஐ அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் தான் இருந்து வருகிறது. ஊர் மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் சிலர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் இதுபோன்று செயல்படுகின்றனர். நாங்கள் கஷ்டப்பட்டு இந்த ஆலயத்தை புதுப்பித்து வருகிறோம். எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு ஆலயத்தை கட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். இல்லையேல் ஆலயத்தை இடிக்கவிடாமல் முன்னின்று போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.


Tags : Madathur ,Thoothukudi ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது