சீர்காழியில் மனநலன் பாதிக்கப்பட்ட பீகார் இளைஞர் சிகிச்சைக்குபின் பெற்றோரிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை, டிச.11:  பீகார் மாநிலம் மாதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் சௌத்ரி மகன் ஹீராலால் சௌத்ரி (24). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மனநலன் பாதிக்கப்பட்டு, தனது பெற்றோர், மனைவியை பிரிந்து பீகார் மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியேறி, பல மாநிலங்களைத் தாண்டி தமிழகத்துக்கு வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆக்ரோஷமான மனநிலையுடன் கடைவீதி பகுதியில் வருவோர், செல்வோரை கட்டைக்கழியுடன் விரட்டி அச்சுறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசனின் உத்தரவின் பேரில் சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்திலிருந்து அதன் இயக்குனர் ஜெயந்தி உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் சென்று அவரை மீட்டு, மறுவாழ்வு மையத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையின் காரணமாக இரண்டு மாதங்களுக்குள்ளாகவே ஹீராலால் சௌத்ரி குணமடைந்தார். இதையடுத்து, சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் ஜெயந்திஉதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது மகனை கண்ட ஹீராலாலின் தந்தை சுரேஷ் சௌத்ரி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார்.கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்

Related Stories: