×

கோமலில் ஆசிரியர் தற்கொலை முயற்சி சம்பவம் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குத்தாலம், டிச.11: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.கடந்த 7ம் தேதி தலைமை ஆசிரியர் சித்ரா மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் செந்தில் என்பவரை அவமானப்படுத்தியதாக கூறி ஆசிரியர் பள்ளியிலேயே தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று தலைமை ஆசிரியை சித்ரா பள்ளிக்கு வந்ததும் ஆசிரியர்கள் 20க்கும் மேற்பட்டோர் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது தலைமை ஆசிரியை சித்ரா தனது காரில் பள்ளியை விட்டு வெளியே செல்ல முயற்சித்தபோது, பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் காரை வழிமறித்தனர். அப்போது, கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 36 மடிக்கணினிகள் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தின் வாயில் கதவை மூடி பூட்டு போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ராமேரி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 மணி போராட்டத்திற்கு பிறகு தலைமை ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததன் பேரில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.



Tags : Komal Teachers ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ