×

திருமானூர் ஒன்றியம் தூத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்

அரியலூர், டிச.11: தமிழ்நாடு முதலமைச்சர் கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், தெருவிளக்கு அமைத்தல், சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார்.அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், தூத்தூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ் தூத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.13 ஆயிரத்து500 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டியினை ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு அமைப்பின் முழு பயன்பாட்டினை எய்தும் வகையில் பள்ளிக்கூட மேல் தளத்தில் பெய்யும் மழைநீரை முழுவதும் சேகரிக்கும் வகையில் பணிகளை விரைவில் முடிக்கவும், அனைத்து அரசு கட்டிடங்களிலும் மழைநீர் அமைப்பினை சீரமைத்து, மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரினை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து, பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அரசு அறிவுறுத்தியுள்ள உணவு அட்டவணையின்படி மாணவ, மாணவிகளின் வருகைக்கேற்ப உணவு தயார் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், உணவுப்பொருட்களின் இருப்பு மற்றும் பயன்பாடு குறித்து அதற்குண்டான பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் உணவுப்பொருட்கள் சரியான அளவில் இருப்பு வைக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் மதிய உணவிற்காக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் உணவின் சுவை போதிய அளவு உள்ளதா என மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் குழாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அரசு செயல்படுத்தி வரும் குடிநீர் வினியோகப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குழாய் பதிக்கும் பணிகளை சிறப்பான முறையில் அமைத்து, சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகத்தினை பார்வையிட்டு திறந்தவெளியில் மலம் கழிப்பதனால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சமுதாய சுகாதார வளாகத்தினை ஏற்படுத்தவும், தாங்கள் பயன்படுத்தும் சமுதாக சுகாதார வளாகத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தினார்.ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாகீர்உசேன், செந்தில், தூத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Thirumanur Union Duttur Panchayat ,
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...