சென்னை விமான நிலையத்தில் 2.23 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக ஏர்இந்தியா விமானம் நேற்று சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு உள்நாட்டு பயணியாக வந்த 28 வயது வாலிபரை சந்தேகத்தின் பேரில், தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டபோது, உள்ளாடைக்குள் 43.3 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கப்பசை இருந்தது. அதை கைப்பற்றினர்.விசாரணையில், சார்ஜாவிலிருந்து தங்கப்பசையை கடத்தி வந்த பயணி, அதை விமான சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, திருவனந்தபுரத்திலேயே இறங்கியதும், அதே கடத்தல் கும்பலை சேர்ந்தவரான, இந்த பயணி விமானத்தில் உள்நாட்டு பயணியாக ஏறி, தங்கப்பசையை எடுத்து உள்ளாடைக்குள் மறைத்து கடத்தியதும் தெரியவந்தது.

 சார்ஜாவிலிருந்து தங்கத்தை கடத்தி வந்து திருவனந்தபுரத்தில் இறங்கிச்சென்ற முக்கிய கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடுகின்றனர். இதற்கிடையே துபாயிலிருந்து பிளை துபாய், இலங்கையில் ஏர்இந்தியா, சார்ஜாவிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 விமானங்களில் வந்த சென்னையை சேர்ந்த 3 பயணிகள் தங்களுடைய உள்ளாடைகள், சூட்கேஸ்க்குள் மறைத்து வைத்திருந்த 1.23 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு 50 லட்சம். இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: