கோவை அரசு மருத்துவமனையில் கட்டண வார்டு அமைக்க நடவடிக்கை

கோவை, டிச.10: கோவை அரசு மருத்துவமனையில் கட்டண வார்டு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை உள்பட 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அதி நவீன கருவிகளின் உதவியுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு கட்டண வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண வார்டிற்கு இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என மருத்துவமனை டீன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு கட்டண வார்டிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கட்டண வார்டு சென்னை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டண வார்டில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு தனியாக வார்டு அளிக்கப்படும். மருந்துகள், சிகிச்சைகளுக்கும் குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் தனியாக வார்டு வேண்டும் என கேட்கும் நபர்களின் வசதிக்காக இது போன்ற கட்டண வார்டுகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கட்டண வார்டுகள் அமைத்தால், அதற்கு ஏற்ப மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: