×

குளச்சல் வாணியக்குடியில் விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 83 பவுன் கொள்ளை

குளச்சல், டிச.10: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வாணியக்குடியில் விசைப்படகு உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 83 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வாணியக்குடியை சேர்ந்தவர் ஆன்றனி பாபு (48). விசைப்படகு உரிமையாளர். கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி ராணி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் வெளியூரில் படித்து வருகிறார். 2 மகள்களும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் உள்ளனர். ஆன்றனிபாபு தனது 2 மகள்களுக்கும் திருமணத்துக்கான ஏற்படுகளை செய்து வருகிறார்.

இதற்காக நகைகள் மற்றும் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் ஆன்றனிபாபு ஊருக்கு வந்தார். இன்னும் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் கேரளா செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் அருகில் உள்ள குருசடியில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்ள ஆன்றனி பாபு குடும்பத்தினருடன் சென்றார்.  பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் வீடு திரும்பினர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கவனித்தனர். படுக்கை அறை கதவும் திறக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த நகை பெட்டிகள் வெளியே வீசப்பட்டு கிடந்தது. அதில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது.

வீட்டில் உள்ளவர்கள் திருவிழாவுக்கு சென்ற பின்னர் மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 83 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆன்றனிபாபு குளச்சல் போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. ஏஞ்சல் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி கடற்கரை சாலையில் ஓடி அங்குள்ள நிழற்குடை அருகில் நின்றது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் வாணியக்குடி பகுதியில் முகாமிட்டு விடிய விடிய விசாரணை நடத்தினர். வீட்டில் உள்ளவர்கள் திருவிழாவுக்கு சென்ற நேரத்தில் மகள்களின் திருமண செலவுக்காக சேமித்து வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kulachal Vaniyakudi ,
× RELATED டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை