×

நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு நகராட்சி தவிர்த்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 7.29 லட்சம் வாக்காளர்கள் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

நாகர்கோவில், டிச.10: குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 7 லட்சத்து 29 ஆயிரத்து 535 வாக்காளர்கள் அடங்கிய பட்டியலை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு நகராட்சி தவிர பிற 51 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வாக்காளர் பட்டியலை கலெக்டர் அரவிந்த் நேற்று நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். குமரி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குற்றாலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், குளச்சல் நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் காஞ்சனா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நகர்ப்புற அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் அண்மையில் வெளியிடப்பட்ட சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நகர்ப்புற வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஆணையர், செயல் அலுவலர்களால் இன்று (நேற்று) வெளியிடப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகராட்சிகளில் 28 ஆயிரத்து 461 ஆண், 29 ஆயிரத்து 381 பெண், 6 இதரர் என்று 57 ஆயிரத்து 848 பேர் இடம் பெற்றுள்ளனர். இங்கு 77 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சிகளில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 832 ஆண், 3 லட்சத்து 35 ஆயிரத்து 812 பெண், 43 இதரர் என்று 6 லட்சத்து 71 ஆயிரத்து 687 பேர் இடம் பெற்றுள்ளனர். 867 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள், பேரூராட்சிகள் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 293 ஆண் வாக்காளர்களும், 49 இதர வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 7 லட்சத்து 29 ஆயிரத்து 535 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 944 வாக்குசாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பமோ அல்லது பதியப்பட்டுள்ள பெயருக்கோ அல்லது அப்பட்டியலில் கண்ட விபரத்திற்கு மறுப்புரை தர விரும்புவோர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தக்க கோரிக்கையோ, மறுப்புரையோ முதலில் தந்து அதன் மூலம் தக்க மாற்றத்தை வாக்காளர் பட்டியலில் இணையான பதிவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நாள் வரை மாற்றம் கோரி வரப்பெறும் ேகாரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளின் மேல் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரால் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தம் செய்து தரப்படும் ஆணைகள் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் முறையாக பதியப்படும். நாகர்கோவில் மாநகராட்சிக்கு எத்தனை வார்டுகள் என்பது உறுதி செய்யப்படவில்லை. கொல்லங்கோடு நகராட்சி, நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகள் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற பிறகு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மக்கள்தொகை எண்ணிக்கை சமமாக இருக்கும் வகையில் மாநகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திமுக சார்பில் அகஸ்தீசன், வீர வர்க்கீஸ், காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ஜாண் பெனடிட், அதிமுக சார்பில் ஜெயச்சந்திரன், சத்திய வினோ, தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கிமுத்து, தே.மு.தி.க சார்பில் நாராயணன், மணிகண்டன், மார்க்சிஸ்ட் சார்பில் கண்ணன், பாஜ சார்பில் நாகராஜன், ஜெகதீசன், மார்க்சிஸ்ட் சார்பில் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘கிராம ஊராட்சிகள் ஏதும் இப்போது இணைக்கப்படவில்லை’
இது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் மேலும் கூறுகையில், ‘தேர்தல் ஆணையம் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது பற்றி கூறவில்லை. அதற்கு முன்னேற்பாடாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம் நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகள், 34 வாக்குசாவடிகள் உள்ளன. பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டு, 21 வாக்குசாவடிகள் உள்ளன. குழித்துறையில் 21 வார்டு, 22 வாக்குசாவடிகள் உள்ளது. பேரூராட்சிகளில் மொத்தம் வார்டுகள் எண்ணிக்கை 828 ஆகும். இங்கு 867 வாக்குசாவடிகள் உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும். அதனை போன்று கொல்லங்கோடு பேரூராட்சியுடன் ஏழுதேசம் பேரூராட்சியும் இணைக்கப்பட்டு நகராட்சியாகிறது.

இவற்றுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் கிராம ஊராட்சிகள் ஏதும் இப்போது இணைக்கப்பட வில்லை’ என்றார். கூட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘வார்டுகள் எல்கை நிர்ணயம் செய்யும் முன்னர் கருத்து கேட்க வேண்டும். ஒரு ஊரை மூன்று நான்கு வார்டுகளில் பிரித்து வைத்து வார்டு நிர்ணயம் செய்யக்கூடாது, மக்கள் அந்த பகுதியில் ஒரு பிரதிநிதியை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்றார். இதற்கு பதிலளித்த கலெக்டர், ‘வார்டுகளில் மக்கள்தொகை சம அளவில் இருக்க வேண்டும் என்றுதான் பார்ப்பார்கள். ஒரு வார்டில் மிக குறைவாகவும் இருக்க கூடாது, மிக அதிகமாகவும் இருக்க கூடாது என்ற அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்படும்’ என்றார்.

Tags : Collector ,Nagercoil Corporation ,Kollankodu ,Municipality ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...