×

வடிவேலு காமெடி பாணியில் குடோனில் திருட்டு மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்ததால் போலீசாரிடம் பிடிபட்ட கொள்ளையன்: கூட்டாளிகளும் சிக்கினர்

சென்னை: வடிவேலு காமெடி பாணியில் தனியார் நிறுவன குடோனில் திருட வந்த கொள்ளையன், மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்ததால் போலீசில் பிடிபட்டார். அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தவம் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தனது கூட்டாளிகளுடன் இரவில் ஒரு வீட்டில் திருட செல்வார். அங்கு மின் விளக்கு எரியாமல் இருட்டாக இருக்கும். அப்போது, பீரோவில் சாவி போடும் ஓட்டை என நினைத்து, ஸ்விட்ச் பாக்ஸ் ஓட்டையில் வடிவேலு கம்பியை விட, மின்சாரம் பாய்ந்து அலறுவார். இந்த காமெடி பாணியில் சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.  

சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் விலை மதிப்புள்ள காப்பர் மற்றும் இரும்பு கம்பிகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மர்ம நபர்கள், செக்யூரிட்டி பாதுகாப்பை மீறி அந்த குடோனுக்குள் புகுந்து, அங்குள்ள விலை உயர்ந்த எலக்ட்ரிக் உபகரணங்களை திருட முயன்றனர்.

அங்கு மின்விளக்கு அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால், இருள் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. டார்ச் அடித்து பொருட்களை தேடினால் மாட்டிக் கொள்வோம் என நினைத்த கொள்ளையர்கள், இருளில் தடவியபடி அங்கும் இங்கும் பொருட்களை தேடியுள்ளனர். அப்போது, வடிவேலு நகைச்சுவை பாணியில் மின்சார ஸ்விட்ச் பாக்ஸில் கொள்ளையன் ஒருவன் தெரியாமல் கை வைத்ததால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினான். சத்தம் கேட்டு செக்யூரிட்டிகள் ஓடிவந்து பார்த்தபோது ஒருவன் 2 கைகளும் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். உடன் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய கொள்ளையனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், அன்னை சத்யா நகரை சேர்ந்த முருகன் (24) என்பதும், இவர் தனது நண்பர்களான பாலாஜி (22), விஜய் (20) ஆகியோருடன் இங்கு விலை உயர்ந்த மின்சாதனங்களை திருட வந்ததும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த பாலாஜி மற்றும் விஜயை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : Gudon ,
× RELATED புதர் மண்டி கிடக்கும் விற்பனை கூடம்