×

அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உரக்கிடங்கு முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

அருப்புக்கோட்டை, டிச. 9:அருப்புக்கோட்டை சுக்கில்நத்தம் ரோட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் கசடு கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உரக்கிடங்கினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.  இதனையொட்டி கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கி ஏற்றி வைத்து பணிகளை துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் கழிவறை தொட்டி கழிவுகளை சுத்திகரிப்பு செய்து அகற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான சுக்கில்நத்தத்தில் 5 ஆயிரத்தி 150 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கின் கழிவுநீர் கசடுஅகற்றும் மேலாண்மை திட்டம் நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த உரக்கிடங்கு வளாகத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.   இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ கல்யாணகுமார், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் (பொ) ராமலிங்கம், உதவி பொறியாளர் ஹசினாபேகம், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Aruppukottai ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...