×

முதுகுளத்தூர்-கமுதி இடையே சாலையின் குறுக்கே ஓடும் வெள்ள நீர் பாலம் அமைக்க வலியுறுத்தல்

சாயல்குடி, டிச.9:   முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டை, மதுரை செல்லும் பிரதான சாலை உள்ளது. இதனை கடலாடி, முதுகுளத்தூர், தேரிருவேலி, பேரையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேரையூர் அருகே பாக்குவெட்டி பெரியபாலம் அருகே இரண்டு இடங்களில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலை தாழ்வாக அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நவ.27ம் தேதி முதல் வைகை அணையிலிருந்து பார்த்திபனூர் பரளையாறு வழியாக அபிராமம் கிருதுமால் நதி, கமுதி குண்டாற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ஆறு, ஓடை வழித்தடங்களில் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. பாக்குவெட்டி, பேரையூர் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் தண்ணீர் முழுமையான கொள்ளளவில் செல்கிறது.

இதனால் தண்ணீர் உடைப்புகளில் வழியாக வெளியேறி பிரதான இச்சாலையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வழியாகவும் செல்கிறது. விபத்து பகுதியாக உள்ள இந்த தாழ்வான சாலையின் குறுக்கே தண்ணீர் கடந்து செல்வதால் வேகமாக வரும் இருச்சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் பேரையூர், பாக்குவெட்டி கிராமமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய பணிக்கு இச்சாலையில் நடந்து செல்கின்றனர். மழை பெய்தால் ஓடும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும், அப்போது பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத  நிலை ஏற்படுகிறது. இந்த அவலம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கிறது. எனவே தாழ்வான இச்சாலையில் பாலங்கள் அமைத்து தரம் உயர்த்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mudukulathur-Kamuthi ,
× RELATED முதுகுளத்தூர்-கமுதி சாலை பராமரிப்பு...