×

பொதுமக்கள் அதிகஅளவில் படைவீரர் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும்

தஞ்சை, டிச.9: படைவீரர் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.65.18 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதிகஅளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதிவசூலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்தில் 18 பேருக்கு ரூ.1,26,78,795 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

1949-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம் நாள் படைவீரர் கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. படைவீரர் கொடிநாள் அனுசரிப்பு 2021ஐ முன்னிட்டு உண்டியலில் பணம் செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதிவசூல் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிதியுதவி நாட்டுக்காக போரில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற படைவீரர் குடும்பத்தினர் மறுவாழ்வு, நலனுக்காகவும் மற்றும் படையிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காகவும் செலவிடப்படுகிறது.

2020ஆம் ஆண்டு கொடிநாள் அரசின் இலக்கு ரூ.54,32,000 அதில் ரூ.64,18,900 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 118 சதவீதம் ஆகும். கொடிநாள் 2021ம் ஆண்டிற்கு ரூ.65,18,000 இலக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்தஆண்டு வசூல் தொகையைவிட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகஅளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.வருவாய் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், முப்படை வீரர்களின் தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Flag Day Fund ,
× RELATED கொடிநாள் நிதியாக ரூ.58 கோடி திரட்டி தமிழ்நாடு அரசு புதிய சாதனை!