குப்பைகளை தரம் பிரித்து உரமாக்க தமிழகத்தில் 143 இடங்கள் தேர்வு

புதுக்கோட்டை, டிச.8: குப்பைகளை தரம் பிரித்து உரமாக தயாரிப்பதற்கு தமிழகத்தில் 143 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்தார். புதுக்கோட்டையில் தமிழக சுற்று சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று அளித்த பேட்டி: தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை நவீன முறைப்படி மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்கா குப்பைகளை மறுசுழற்சி மூலமாக உரமாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் 143 இடங்களில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 23 இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டு ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள், உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பசுமை தீர்ப்பாயத்தில் தமிழகத்திலிருந்து இந்த குப்பைகள் தொடர்பான வழக்குகள் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரியில் கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுகள் கலந்து பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தாக உள்ளது. இதுகுறித்து ஐ.ஐ.டி நிபுணர்குழு, காவிரி மாசு படாமல் இருக்க ஆய்வுசெய்து அறிக்கை அளித்துள்ளது. சுற்றுச்சூழல் துறையும் இந்த அறிக்கையை மையமாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது. விரைவில் காவிரி மாசு இல்லாமல் இருப்பதற்கு பணிகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: