மாணவர்களின் நலன் கருதி கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும்

கொள்ளிடம், டிச.8: கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது.கட்டிடத்தின் ஆயுள் காலம் முடிந்து விட்டது.இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் உள் புறத்திலும் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இங்கு தடை செய்யப்பட்ட பகுதி என்று கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கிறது.வலிமை குன்றிய இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.  இந்த கட்டிடத்தில் கல்வி பயில வேண்டிய மாணவ-மாணவிகள் இந்த கட்டிடத்தின் அருகாமையிலுள்ள மாற்று கட்டிடத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.அந்த மாற்று கட்டிடம் சரியில்லாத நிலையில் மழைநீர் உள்ளே புகுந்து மாணவ மாணவிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மேலும் இந்த ஆபத்தான கட்டிடத்தை தான் மாணவ மாணவிகள் தினமும் கடந்து செல்கின்றனர்.  எனவே ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு தெரிவித்தார்.

Related Stories: