கன்னியாகுமரி அருகே கேஸ் குடோன் லோடுமேன் மர்ம சாவு மழை தண்ணீரில் இறந்து கிடந்தார்

கன்னியாகுமரி, டிச.8 : கன்னியாகுமரி அருகே கேஸ் குடோன் லோடுமேன், மழையால் தேங்கி நின்ற தண்ணீருக்குள் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் அரிகோபால கிருஷ்ணன் (40). இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அரி கோபால கிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள கேஸ் குடோனில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல், வேலைக்கு சென்ற அரி கோபால கிருஷ்ணனை, மதியம் 12 மணியில் இருந்து காண வில்லை. செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே வீட்டுக்கு சாப்பிட சென்று இருப்பாரோ? என்ற சந்தேகத்தின் பேரில் வீட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போதும் அங்கும் அவர் செல்ல வில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவரை தேடி வந்த நிலையில், கேஸ் குடோன் பின்புற பகுதியில் தேங்கி கிடந்த மழை நீரில் அரி கோபால கிருஷ்ணன் இறந்து கிடந்தார். உடனடியாக இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தகவல் அறிந்து உறவினர்களும், பொதுமக்களும் திரண்டனர். போலீசார் அரி கோபால கிருஷ்ணனின் உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். இதில் காயங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து,  அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை உறுதியாக கூற முடியும் என போலீசார் கூறி உள்ளனர். அரி கோபால கிருஷ்ணன் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வலிப்பால் உயிரிழப்பா?

அரி கோபால கிருஷ்ணனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும். அதே போல் வலிப்பு நோய் வந்து அவர் தண்ணீருக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர் மழை காரணமாக கேஸ் குடோனை சுற்றி கடந்த 2 மாதங்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீருக்குள் நடந்து தான் வேலை செய்து வந்தனர். வலிப்பு பிரச்னை இருந்ததால், அதிக நேரம் அரி கோபால கிருஷ்ணன் தண்ணீரில் நிற்க மாட்டார்.  நேற்றும் வேலைக்கு வந்த பின், வழக்கம் போல் பின்னால் சென்ற போது வலிப்பு வந்திருக்கலாம். யாரும் கவனிக்காததால் இறந்திருக்கலாம் என தொழிலாளர்கள் கூறினர்.

Related Stories: