×

வாகன சோதனையின் போது துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய ரவுடி: மீஞ்சூரில் பரபரப்பு

சென்னை: மீஞ்சூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை, அவ்வழியே வந்த ரவுடி துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மீஞ்சூர் காவல் நிலைய எஸ்ஐ வேலுமணி தலைமையில் தனிப்படை போலீசார் 4 பேர், நேற்று முன்தினம் இரவு அத்திப்பட்டில் உள்ள ஒரு சிமென்ட் கம்பெனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்தி விசாரித்தனர். அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையில், என்ன இருக்கிறது என்று ேபாலீசார் கேட்டனர்.ஆனால், அவர் பதில் சொல்ல மறுத்துள்ளார். இதனால், அந்த பையை பிடிங்கி, சோதனை செய்ய முயன்றபோது, கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், திடீரென அந்த பையில் கையை விட்டு, உள்ளே இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி, ‘கிட்ட வந்தா சுட்டு விடுவேன்,’ என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன போலீசார், லாவகமாக செயல்பட்டு, அந்த வாலிபரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை மீஞ்சூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில் பழைய குற்றவாளி விக்னேஷ் (25) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

விசாரணையில், பொன்னேரி, மீஞ்சூர், காட்டூர் பகுதிகளில் ஏராளமான கன்டெய்னர் கம்பெனிகள், இந்தியன் ஆயில் நிறுவனம், தனியார் சிமென்ட் ஆலை உள்ளிட்ட ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வேலை முடிந்து இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்கள் மற்றும் பைக்கில் தனியாக வருபவர்களை மடக்கி, துப்பாக்கி முனையில் மிரட்டி நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை விக்னேஷ் பறித்து வந்தது தெரியவந்தது.மேலும் இவர் எத்தனை பேரிடம் நகை, செயின், செல்ேபான்களை பறித்துள்ளார். எங்கெல்லாம் வழிப்பறியில் ஈடுபட்டார், எத்தனை நாட்களாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டார், வேறு யாரோனும் தொடர்பு உள்ளதா, இவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை ரவுடி துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Rowdy ,Minsur ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...