சத்தி - மேட்டுப்பாளையம் சாலையில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழைநீர்

சத்தியமங்கலம், டிச.7: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக ஓடைகள் மற்றும் பள்ளங்களில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மாரனூர் பிரிவு அருகே மழைநீர் தரைப் பாலத்தை மூழ்கடித்த படி சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தரைப்பாலத்தின் மீது 2 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தின் மீது செல்லும் வெள்ளம் வடியும் வரை காத்திருந்தனர். மேலும் மழைநீர் அப்பகுதியில் உள்ள வயல்களில் தேங்கியதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

சத்தியமங்கலத்தில்  வேணுகோபால சுவாமி கோயிலும், கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீரிலஇறங்கி நடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நாட்களாக இங்கு மழை நீர் தேங்கி உள்ளதால் கோவில் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வணிக வளாகத்தின் சுவர் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் செங்கற்கள் வெளியே தெரிகின்றன.

ஊருக்குள் வெள்ளம் புகுந்தது: அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட தோட்டக் குடியாம்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களது  குடியிருப்புக்கு பகுதிக்கு அருகே 300 ஏக்கர் பரப்பில் வேம்பத்தி ஏரி அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக 11 ஆண்டுக்கு பிறகு  ஏரி நிறைந்ததால் குடியாம்பாளையம் பகுதியில் 7 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளில்இருந்தவர்களை வருவாய்த்துறையினர் அருகே உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்தனர்.வெள்ளம் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்தில் வீட்டுமனை இடம் வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: